பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

பெங்களூரு: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது சொகுசு வசதி பெறுவதற்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. எனவே, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என பலமுறை அதிருப்தி தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற நெருக்கடிக்கு பணிந்து இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை அரைகுறையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தெரிவிக்க வேண்டும் என்று மாநில உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் ஜூன் மாதத்திற்கு பிறகு பலமுறை விசாரணைக்கு வந்த போதும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம் தரவில்லை.

கடந்த நவம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக உள்துறை செயலாளள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு டிசம்பர் 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. அதன்படி இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி கர்நாடக உள்துறை அமைச்சருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்குள் அவரது அனுமதி பெற்று முழுமையான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்’ என தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: