ஓரிரு நாளில் கையிருப்பு முடியும் நிலையில் சென்னைக்கு 4.20 லட்சம் தடுப்பூசிகள் வந்தது: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும்; பொதுமக்களுக்கு தடையின்றி செலுத்த அரசு தீவிரம்

சென்னை: ஓரிரு நாளில் தமிழகத்தில் தடுப்பூசிகள் முடிவடையும் தருவாயில் 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று புனேவில் இருந்து சென்னை வந்தது. மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து வழங்கும் பணி நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல், கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 18 முதல் 44 வயது வரையில் உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் இன்றி இருந்தனர். ஆனால், தடுப்பூசி குறித்து தமிழக அரசின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகமானோர் வருகின்றனர். நாள் தோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கணக்கின் படி தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 96.18 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டிருந்தது. இவற்றில் 87.70 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதனால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஓரிரு நாளில் முடிந்து விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது. இந்தநிலையில், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய தடுப்பூசியை காலதாமதம் இன்றி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.  இந்தநிலையில், தமிழக அரசின் கோரிக்கை மற்றும் தேவையை ஏற்று மத்திய சுகாதாரத்துறை 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு குடோனிலிருந்து 36 பார்சல்களில் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சென்னைக்கு நேற்று மத்திய அரசு அனுப்பியது. அந்த தடுப்பூசி பார்சல்களுடன் புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தது.இதையடுத்து, சென்னை விமானநிலைய ஊழியர்கள் தடுப்பூசி பார்சல்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், குளிர்சாதன வாகனங்களில் தடுப்பூசி மருந்து பார்சல்களை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மருந்து பாதுகாப்பு குடோனுக்கு கொண்டு சென்றனர். மேலும், தமிழக அரசுக்கு வந்த 4,20,570 டோஸ்  தடுப்பூசிகளுடன் அதே விமானத்தில் வந்த 13 பார்சல்களில் 1  லட்சத்து 45 ஆயிரத்து 900 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள்  சென்னை  பெரியமேட்டில் உள்ள மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்ட தடுப்பூசிகள் இன்று அல்லது நாளை மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும். மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் நிலையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடையின்றி செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். * தமிழகத்துக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. * 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.* தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 96.18 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டிருந்தது. * தமிழகத்தில் 87.70 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. …

The post ஓரிரு நாளில் கையிருப்பு முடியும் நிலையில் சென்னைக்கு 4.20 லட்சம் தடுப்பூசிகள் வந்தது: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும்; பொதுமக்களுக்கு தடையின்றி செலுத்த அரசு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: