சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை: சிறுவர் பூங்கா, நடைபாதை, மின்விளக்கு, இருக்கைகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேடவாக்கம் ஏரியை சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேடவாக்கத்தில் உள்ள பெரிய ஏரி, 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேடவாக்கம், வடக்குப்பட்டு, வெள்ளக்கல், கோவிலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேற்கண்ட பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது. இந்நிலையில், முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, ஏரியின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், மேடவாக்கம் பெரிய ஏரியை புதுப்பொலிவு பெற செய்யும் முயற்சியில், நீர்வளத்துறை இறங்கியுள்ளது. குறிப்பாக, ஏரியை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபாதை, 240 விளக்குகளால் அலங்காரம், 20 முதல் 25 இருக்கைகள், ஏரிக்கரையில் மரக்கன்றுகள், சிறுவர் பூங்கா, பொதுமக்கள் பொழுதுபோக்கு வசதிகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளனர்.

ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைத்துவிட்டால், அதன்பிறகு ஆக்கிரமிப்புகளை தவிர்க்க முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக மேடவாக்கம் பெரிய ஏரியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. இதற்கான வேலைகளில் நீர்வளத்துறை இறங்கியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றிவிடுவர், என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், மேடவாக்கம் பெரிய ஏரியை போலவே அருகிலுள்ள கல்லேரி, சின்ன ஏரி ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறை மீட்டெடுக்க வேண்டும். இந்த நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் விநியோகமும் தடையின்றி கிடைக்கும், என்றனர்.

The post சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: