ஆம்பூர் அருகே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது; பாராக மாறிய பயணிகள் நிழற்குடை: பெண்களை மிரட்டும் போதை ஆசாமிகள்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை தற்போது பாராக பயன்படுத்தப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஆம்பூர் அடுத்த பந்தேரபல்லியில் உம்ராபாத்தில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. கடந்த 2020ல் லாரி ஒன்று மோதியதில்  இந்த நிழற்குடை சேதமானது. இந்நிலையில்,  பயணிகள் வெயில் மற்றும் மழையில் அவதிபட்டு வந்தனர்.  இதை தொடர்ந்து கடந்த 2019-20ல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அந்த நிழற்குடை சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இரவு மட்டுமன்றி பட்டப்பகலில் சில போதை ஆசாமிகள் இந்த நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துவதும், போதையில் ஆபாசமாக பேசி அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளிடம் ஆபாசமாக பேசியும், அரை குறை ஆடையுடன் வீழ்ந்து கிடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் முகம் சுளிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உள்ளிட்ட பயணிகள் நிழற்குடையை தவிர்த்து அருகில் உள்ள இடத்தில் வெயில், மழையில் நின்று பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது.

நாளுக்கு நாள் இந்த போதை ஆசாமிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் ஒரு சில பயணிகள் அங்கு நிற்காமல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்று நிற்க துவங்கி உள்ளனர். மேலும், போதை ஆசாமிகள் குடித்து விட்டு காலி மதுபாட்டில்கை உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த நிழற்குடை ஒரு திறந்த வெளி  பாராகவே காட்சியளிக்கிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: