முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதிக்கு சொந்தமான கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார்: கோரிக்கை ஏற்று செல்பியும் எடுத்தார்

சென்னை: திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் என்ற இடத்தில் வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சொந்தமான கல்லூரியில் பயிலும் மாணவிகள் சாலையில் நின்றிருந்தனர். இதை கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த மாணவிகள், `இப்பகுதியில் பேருந்து சரியாக நிற்பதில்லை. குறைந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதுவும் மிகவும் பழுதடைந்து உள்ளது’ என தெரிவித்தனர். இதற்கு முதல்வர் உடனடியாக இப்பகுதியில் பேருந்து நிறுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். பிறகு அங்கிருந்த மாணவிகள், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனே, வாகனத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியதும் மாணவிகள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பிறகு மீண்டும் தன்னுடைய வாகனத்தில் ஏறி திருத்தணியில் நடந்த விழாவிற்கு சென்றார். முதல்வர் தங்கள் கோரிக்கையை கேட்டதும், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டதும் மாணவ, மாணவிகளை மிகவும் உற்சாகம் அடைய செய்தது.

Related Stories: