ராணுவ தளவாட கண்காட்சி ஆவடியில் ஒரு வாரம் நடக்கிறது.! குண்டுதுளைக்காத கருவிகள் அறிமுகம்

ஆவடி: ஆவடியில் உள்ள டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை சார்பில், ராணுவ தளவாடங்களின் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” என்னும் சுதந்திர தின பவள விழாவை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கிவைத்தார். இதில் நாட்டில் உள்ள 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளும் பங்கேற்றன. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஆவடி டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை சார்பில் ராணுவ தளவாட கண்காட்சி துவங்கி, வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியை ஆவடி டேங்க் பேக்டரி சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் கிஷோர், படைத்துறையின் உடை தொழிற்சாலை பொது மேலாளர் சுர்ஜித் தாஸ் ஆகியோர் துவக்கிவைத்து பார்வையிட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி வளாகத்தில் உள்ள அஜய் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் கண்காட்சியில் அஜெயா டி-72, பீஸ்மா டி-90, அருண் எம்கே ஐ மற்றும் பிரிட்ஜ் லேயர் டேங்க் (பிஎல்டி) - டி72 ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ், இன்ஜின்கள், டிராக் வீல்கள் போன்ற பீரங்கிகளின் உதிரி பாகங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஆவடியில் உள்ள படைத்துறை தொழிற்சாலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளை தடுக்கும் தலைக்கவசத்தை (ஹெல்மெட்) அறிமுகப்படுத்தினர்.

இந்த தலைக்கவசம் 9 மி.மீ  தோட்டாக்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. கண்காட்சியில் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், ஆடைகள் மேம்படுத்தப்பட்ட போர் சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்டுகள், குளிர்கால ஆடைகள் போன்ற தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியின் முதல் நாளில் ஆவடி மற்றும் சுற்று வட்டாரத்தை சார்ந்த பள்ளி, கல்லூரிகளில் இருந்து 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்து பார்வையிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்று இருந்த ராணுவ தளவாடங்கள், உதிரிபாகங்கள் பற்றி பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Related Stories: