கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீகாமாட்சி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் சுமங்கலி பூஜை-500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து பங்கேற்பு

சித்தூர் : சித்தூரில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் சுமங்கலி பூஜை நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை சோமவாரம் முன்னிட்டு ஸ்ரீகாலபைரவ அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் சுமங்கலி பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கார்த்திகை சோமவாரமான நேற்று ஸ்ரீகாமாட்சி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம், விபூதி அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், ருத்ராட்சை அபிஷேகம், புனித நீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுமங்கலி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டனர். கவுரி அம்மனுக்கு பூஜை செய்து பெண்கள் குங்கும அர்ச்சனை, பூ அர்ச்சனை, நவதானிய அர்ச்சனைகள் உள்ளிட்ட பூஜைகள் செய்தனர்.

இதுகுறித்து பெண்கள் தெரிவிக்கையில், `ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை சோமவாரம் அன்று சுமங்கலி பூஜை நடைபெறுவது வழக்கம். நாங்கள் எங்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். எங்களுடைய தாலிக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என விரதமிருந்து சுமங்கலி விரத பூஜையில் ஈடுபட்டு வருகிறோம்.

அம்மன் எங்களுக்கு அருள் பாலித்து எங்கள் தாலிக்கு ஆயுள் நீடித்து அருள்பாலிப்பார்’ என்றனர்.

Related Stories: