அயப்பாக்கம் ஊராட்சியில் தடுப்பூசி போட்ட 1500 பேருக்கு கொசு பேட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

ஆவடி: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்ட 1,500 பேருக்கு இலவசமாக கொசு மட்டையை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அயப்பாக்கம் ஊராட்சியில் 6 இடங்களில் 14வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். பின்னர், அவர் மேற்கண்ட சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்ட 1500க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக ரூ.300 மதிப்புள்ள மின்கலன் கொசு மட்டையை வழங்கினார். மேலும், அவர் 50 மாணவ- மாணவிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கினார்.

பின்னர், அவர் கூறியதாவது, `இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிபோட இதுவரை அறிவுறுத்தவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்’ என்றார். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்சினி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ க.கணபதி, வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளரும், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான துரை.வீரமணி, வில்லிவாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் பா.கிரிஜா, துணைத்தலைவர் ஞானப்பிரகாசம், வில்லிவாக்கம் ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியம், மருத்துவ அலுவலர் டாக்டர் லாவண்யா, ஒன்றிய கவுன்சிலர் வினோத், ஊராட்சி துணைத் தலைவர் யுவராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: