கூவத்தில் பைக்குடன் அடித்து சென்ற ஆசாமி: தீயணைப்பு துறையினர் தேடுதல்

பூந்தமல்லி: கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக 10 நாட்களாக கூவம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மதுரவாயல் அருகே  கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்திலும் வெள்ளநீர் செல்வதால் அந்த தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பைக்கில் வந்த 2 பேர் தடையை மீறி தரைப்பாலத்தில் பைக்குடன் கடக்க முயன்றனர். அப்போது வெள்ளத்தில் இருவரும் சிக்கி இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்தவர் அங்கிருந்த கம்பியை பிடித்து தப்பித்து விட்டார். ஆனால் பைக்கை  ஓட்டி சென்றவர் பைக்குடன் நீரில் அடித்து செல்லப்பட்டார். மழை நின்று பத்து நாட்களாகியும் நீரின் வேகம் குறையாததால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாலத்தை மூடி வைத்திருந்த நிலையில், இருவரும் தடுப்பை மீறி சென்றதால் விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர் குறித்த அடையாளம் தெரியவில்லை. பைக்கில் உடன் வந்த ஆசாமியும் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: