பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 5 ஆண்டுகளாக மாணவர்களை பைக்கில் அழைத்து செல்லும் ஆசிரியர்-ஒடுகத்தூர் அருகே நெகிழ்ச்சி

ஒடுகத்தூர் :  ஒடுகத்தூர் அருகே மலை கிராமங்களில் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களை பைக்கில் அழைத்து செல்லும் ஆசிரியரால் அப்பகுதியினர் நெகிழ்ச்சியடைந்தனர்.ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குடிகம், புளியமரத்தூர், குணுக்கனூர், குப்பசூர், புதுகுப்பம் என 46 மலை கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளில், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தாலும் சாலை வசதி மட்டும் அப்பகுதி மக்களுக்கு எட்டா கனியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், மாணவர்களின் நலனுக்காக குடிகம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில், புளியமரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆர்.வேலு என்ற ஆசிரியர் மட்டுமே பணி புரிந்து வருகிறார்.

மேலும், பள்ளி வரும் மாணவர்களுக்கு போதுமான சாலை வசதி இல்லாததாலும், காட்டு பாதையை கடந்து பள்ளி செல்ல வேண்டும் என்பதால், ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டனர்.

ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியர் வேலு தனது கிராமத்தில் இருந்து 15க்கும் மேற்பட்ட மாணவர்களை பைக்கில் அழைத்து சென்று பாடம் நடத்தி வருகிறார். இதனால், அப்பகுதியினர் ஆசிரியரின் இந்த நடவடிக்கையால் நெகிழ்ச்சியடைந்து தங்களின் குழந்தைகளை பள்ளி அனுப்பி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திதர மலை கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளி  

ஒடுகத்தூர் அடுத்த குடிகம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில்  50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில், ஒரு ஆசிரியர் மற்றும் சமையலர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும், கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லாமல் அப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒரே ஆசிரியர் மட்டுமே, வகுப்பு எடுத்து வருவதால், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதில் தாமதமாகிறதாம். எனவே அப்பள்ளிக்கு தலைமை ஆசிரியரை பணியமர்த்தி கூடுதலாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.

Related Stories: