ஆஷஸ் தொடரில் ஆஸி ரன் குவிப்பு: டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்

பிரிஸ்பேன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில்  வார்னர், டிராவிஸ் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 196ரன் முன்னிலை பெற்றுள்ளது.ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா அரங்கில் நடக்கிறது.  முதல் இன்னிங்சில்  இங்கிலாந்து 147 ரன்னுக்கு சுருண்டது. கூடவே மழை காரணமாக  முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிந்தது. இந்நிலையில் 2வது நாளான நேற்று ஆஸி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர்.  மார்கஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் கண்ட மார்னஸ் லபுஷேன் பொறுப்பாக விளையாடி  74ரன் எடுத்து வெளியேறினார்.

ஸ்டீவன் ஸ்மித் 12 ரன்னில் பெவிலியன் திரும்ப,  சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிய  வார்னர் 6 பந்தில் சதத்தை தவறவிட்டார். அவர் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 94ரன் எடுத்தார்.  தொடர்ந்து கேமரன் கிரீன் 0,  விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி12 ரன்னில் வெளியேற,  கேப்டன்  பேட் கம்மின்சை  12 ரன்னில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழக்க செய்தார்.   ஆனாலும் அதிரடியாக விளையாடிய  டிராவிஸ்   85 பந்துகளில்  சதம் விளாசி அசத்தினார்.

முதல்நாள் வெறும் 50.1 ஓவர் மட்டுமே வீசியதால்  நேற்று 98 ஓவர் வீச திட்டமிட்டிருந்தனர். ஆனால் போதிய வெளிச்சமில்லை என 84 ஓவருடன்  2ம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  அப்போது ஆஸி 7 விக்கெட் இழப்புக்கு 343ரன் குவித்திருந்தது. டிராவிஸ் ஹெட் 112*(95பந்து, 12பவுண்டரி, 2சிக்சர்), மிட்செல் ஸ்டார்க் 10* ரன்னுடன் களத்தில் இருக்கின்றனர்.  இங்கிலாந்து தரப்பில்  ஒல்லி ராபின்சன் 3, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜாக் லீச், ஜோ ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். எனவே 196ரன் முன்னிலையுடன் ஆஸி 3வது நாளான இன்று  முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

Related Stories: