மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி கேள்வி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவது குறித்த அரசின் நிலைப்பாடு?

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன, இதுதொடர்பாக ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனவா என்பது குறித்து மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதிமாறன், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்வியில் கூறியிருப்பதாவது:

* இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனவா அல்லது அது குறித்து ஏதேனும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளனவா என்பதை தெரியப்படுத்தவும்

* இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாட்டின் சிறுபான்மை பிரிவு மக்கள் தெரிவித்த எதிர்ப்புகளை ஒன்றிய அரசு பரிசீலனை செய்துள்ளனவா? எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவர்களின் மனநிலை குறித்தும் பொதுமக்களிடம் குறிப்பாக சிறுபான்மைப் பிரிவினரிடம், ஒன்றிய அரசு ஏதேனும் கருத்துக்கேட்பு நிகழ்வோ அல்லது கலந்துரையாடலோ மேற்கொண்டுள்ளனவா? எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்களிடமிருந்து பெறப்பட்ட எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு அவற்றை பரிசீலனை செய்து இச்சட்டத்தினை திரும்பப் பெற ஒன்றிய அரசு முன்வருமா? என்பதனையும் தெரியப்படுத்தவும்.

இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு, ஒன்றிய சிறுப்பான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) வகை செய்கிறது. இந்த சட்டம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அரசியலமைப்பு, சட்ட ரீதியாக அனுமதிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இது நீதிமன்ற விவகாரத்தில் உள்ளது’ என கூறி உள்ளார்.

Related Stories: