டிச.20ம் ேததி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; குற்றால அருவி பகுதியில் பராமரிப்பு பணி தீவிரம்: அதிகாரிகள் ஆய்வு

தென்காசி: குற்றாலத்தில் இம்மாதம் 20ம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அருவிப்பகுதியில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக குற்றாலம் விளங்குகிறது. குற்றாலம், தென்காசி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளின் சுற்றுலா வருவாய் ஆதாரமாகவும் குற்றாலம் விளங்குகிறது. நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில் இம்மாதம் 20ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று கலெக்டர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.

இதற்காக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளும் வகுக்கப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்காக பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றாலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த தரை தளங்கள், தடுப்பு கம்பிகள், உடை மாற்றும் அறை உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கலெக்டர் கோபால சுந்தரராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அபூபக்கர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை நேற்று குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாணிக்கராஜ், உதவி செயற்பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ராஜகணபதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே கடந்த 2 தினங்களாக மழை குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று பகலில் லேசான வெயில் காணப்பட்டது. மாலையில் சற்று இதமான சூழல் நிலவியது.

Related Stories: