மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 143-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வளாகம்- காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு நாளை காலை 10 மணி அளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்கள். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரப் போராட்ட வீரராகவும், அண்ணல் காந்தியடிகள், மகாகவி சுப்பிரமணிய பாரதி, திலகர், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களின் வரிசையில் தமிழராய் மூதறிஞர் ராஜாஜி இடம் பெற்றவர்.
உத்தமர் காந்தியடிகளால் “எனது மனசாட்சியின் பாதுகாவலர்” என்றும், அரசியல் சாணக்கியர், ராஜதந்திரி என்று அழைக்கப்பட்டவர். பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்களால் மூதறிஞர் ராஜாஜி என்று பெருமிதத்தோடும், ‘’அன்பால் அறிவால் ஆற்றலால் எங்கள் இதயம் கவர்ந்த மூதறிஞர்‘’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 10.12.1878 இல் பிறந்தார். படிப்பில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்த காரணத்தினால் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.
அன்றைய ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தினைக் கண்டு வெகுண்டெழுந்தவர். வழக்கறிஞர் தொழிலை விடுத்து, சேலம் நகராட்சியில் தலைவராக ஊதியமே வாங்காமல் பணியாற்றி தன் முதல் மக்கள் பணியைத் தொடங்கினார். அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார். தன் வாழ்நாளில் இறுதிவரையில் மதச்சார்பின்மையைப் பெரிதும் கடைபிடித்த காரணத்தால், சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் ’அரை முஸ்லீம்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்று அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக, மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் என நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை வகித்ததோடு, அந்த பதவிக்கு ஏற்ப, தனது ஆளுமையை உறுதி செய்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக மதுவிலக்குத் திட்டத்தினை இறுதிவரை விடாமல் செயல்படுத்தி, இதன் பொருட்டு ஏற்படுகின்ற இழப்பினை ஈடு செய்கின்ற வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக விற்பனை வரியையும் கொண்டு வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆலய நுழைவு அவசியம் என்பதையும் சாத்தியப்படுத்தியதோடு, விவசாயிகளின் கடன் சுமையைக் குறைத்திட சட்டம் என நல்ல பல திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தினார். தீண்டாமை ஒழிப்பு, கலப்புத் திருமணத்தினைத் தன் இல்லத்திலேயே செயல்படுத்தினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடங்கப்பட்ட ‘’வெள்ளையனே வெளியேறு’’ இயக்கத்தை எதிர்த்து காங்கிரசிலிருந்து விலகி 1960இல் ‘சுதந்திரக் கட்சியினை’ நிறுவி 1967ஆம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியினை, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஏற்பட வழிவகுத்தார். முதிர்ந்த அரசியல் ஞானமும், ஆழ்ந்த அனுபவம் கொண்டிருந்த மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நேர்மையும் எளிமையும் இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. நாட்டின் மிக உயரிய பதவிகளை வகித்த போதிலும், மிகவும் எளிமையாக சொற்ப வாடகையில் வீட்டிலேயே வாழ்நாளின் இறுதிவரையில் வசித்து வந்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்று மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது, தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தையும் முறையாக அரசிடம் ஒப்படைத்துவிட்டு தனது கைத்தடியுடன் வெளியேறினார். விடுதலைப் போராட்டத்தில், அரசு நிர்வாகத்தில் தனது அளப்பரிய பணிகளை ஆற்றிய போதிலும், இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வமும், அதன் தொடர்ச்சியாக அரிய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். குறிப்பாக, மிகப்பெரிய காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார். அவர் எழுதிய பல நூல்களில் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ ’வியாசர் விருது’ ஆகிய நூல்கள் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதன் பொருட்டு 1858ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்று, தலைசிறந்த நிர்வாகியாக விளங்கியமைக்கு 1959 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். அன்னாரின் அருமை பெருமைகளை அடுத்து வருகின்ற தலைமுறையினரும் அறிந்து பயன்படுகின்ற வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த எளிமையான வீடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அரசின் சார்பில் நினைவிடமாக ஆக்கப்பட்டது. மேலும், அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும், தன் வாழ்நாள் முழுதும் நூல்களை விரும்பிப் படிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் நினைவாக ஒரு நூலகமும் கட்டப்பட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கடந்த 05.05.1975 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டம் தொடங்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நாட்டின் மிகப்பெரிய ஆளுமைமிக்க உயரிய பதவிகளை அலங்கரித்து பின்னாளில் திராவிட கட்சிகள் மூலமாகத்தான் தமிழ்நாடு விடிவு பெறும் என்பதை பெரிதும் உணர்ந்து அதற்கு அடித்தளமிட்டார். தந்தை பெரியார் அவர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை அரசியல் ரீதியாக எதிர்த்து வந்தாலும், அவரிடத்தில் கொண்டிருந்த நட்பு ஆழமானது ஆத்மார்த்தமானதும்கூட. மூதறிஞர் ராஜாஜி நல்லடக்கம் செய்யும்பொழுது உடல் இயலாத நிலையிலும் தந்தை பெரியார் அவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுததே நட்பிலக்கணத்திற்கு நற்சாட்சியாகும். அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், மூதறிஞர் இராராஜி அவர்களின் பிறந்த நாள் 10.12.2021 அன்று சென்னையிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவரின் நினைவு இல்லத்திலும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.