முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடிநாள் நிதி வசூலை கலெக்டர் தொடங்கி வைத்தார்-₹81 லட்சம் நிதி வசூலிக்க இலக்கு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூலை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொடிநாள் தினத்தையொட்டி முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கொடிநாள் நிதி வழங்கி வசூலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு ₹1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில், ஊர்காவல்படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் கொடிநாள் நிதி வழங்கி வசூலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் நலனை காப்பதுடன், இந்திய முப்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோரின் பல்வேறு கோரிக்கை தொடர்பாக 2,632 மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,729 முன்னாள் படைவீரர்கள் மற்றும் 3,425 கைம்பெண்கள் என மொத்தம் 10,154 நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ள 483 முன்னாள் படைவீரர்களில் 15 பேர், பல்வேறு அரசு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளார்கள். இந்த வருடம் கொடிநாள் வசூலாக இதுவரை ₹76 லட்சத்து 4 ஆயிரத்து 984 ஆக மொத்தம், 112 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2021ம் ஆண்டிற்கு கொடிநாள் வசூல் இலக்காக ₹81 லட்சத்து 25 ஆயிரம் வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்யப்படும்.

நமது மாவட்டத்தில் உள்ள அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, கொடிநாள் நிதி வசூலில் இலக்கை எட்டிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வழங்கிய பாராட்டு சான்று மற்றும் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, மாவட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பிரமணி, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் கர்னல் (ஓய்வு) வேலு, பிரிகேடியர் (ஓய்வு) சுந்தரம், கர்னல் (ஓய்வு) சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் கலந்து

கொண்டனர்.

Related Stories: