இரண்டாம்நிலை காவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் 500-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்காமல் நிராகரிப்பு

சென்னை: இரண்டாம்நிலை காவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் சிறிய வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டும், பணி நியமன ஆணை வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாக 500-க்கும் அதிகமானோர் வேதனையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய உதவி செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து நிலைகளிலும் தேர்வு பெற்றதால் இரண்டாம்நிலை காவலர்களாகிவிடலாம் என கனவு கண்டிருந்த பல இளைஞர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சிறு சிறு வழக்குகளில் அவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி பணி நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதில் பலரை நீதிமன்றமே குற்றமற்றவர்கள் என வழக்கில் இருந்து விடுவித்தும் பணி கிடைக்கவில்லை.

இப்படி தமிழகம் முழுவதும் 500-க்கும் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வேதனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாய்தகராறில் முதல் தகவல் அறிக்கையில் தன் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கோகுல் கணேஷிற்கு காவலர் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

2017-ம் ஆண்டு காவலர் தேர்வு எழுதிய பிறகு தான் இந்த வழக்கே பதிவு செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். இவரை போலவே நிலத்தகராறில் அண்டை வீட்டாருடன் வாய்ச்சண்டை, சகோதரர் இடையே மோதல் என சின்ன சின்ன சண்டைகள் வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்கவேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: