கரூர் அருகே 2 மகள்களை கொன்று தாயும் தற்கொலை

கரூர்: கரூர் அருகே 2 மகள்களை கிணற்றில் வீசி கொன்று தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(35). கரூரில் உள்ள டெக்டைல்ஸில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா(30). இவரும் அவ்வப்போது டெக்டைல்சில் வேலைக்கு சென்று வருவார். இவர்களது மகள்கள் கனிஷ்கா(6), பூவிஷா(3). இதில் கனிஷ்கா அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். தோட்டத்து வீட்டில்  இவர்களுடன் சக்திவேலின் தந்தை கருப்பசாமி, தாய் நாச்சம்மாளும் வசித்து வருகின்றனர். சரண்யா மனநிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்றிரவு சக்திவேல் மனைவி, குழந்தைகளுடன் ஒரு அறையிலும், கருப்பசாமி, நாச்சம்மாள் ஒரு அறையிலும் தூங்கினர். இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த சரண்யா திடீரென கண் விழித்து, ஒரு மகளை தூக்கிக்கொண்டு வௌியே வந்தார். வீடு அருகே உள்ள 100 அடி ஆழ கிணற்றில் மகளை வீசி விட்டு, வீட்டுக்கு வந்தார். பின்னர் இன்னொரு மகளையும் தூக்கிச்சென்று கிணற்றில் போட்டு விட்டு, தானும் குதித்தார். இந்த கிணற்றுக்கு கைப்பிடி சுவர் எதுவும் இல்லை. தரை மட்டக்கிணறு. கிணற்றில் அலறல் சத்தம் கேட்டு சக்திவேல், அவரது பெற்றோர், அருகில் வசிக்கும் உறவினர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது தாயும், 2 மகள்களும் கிணற்றில் மிதந்தனர். உடனே குஜிலியம்பாறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் உதவியுடன், கிணற்றில் இறங்கி 3 பேரையும் தேடினர். அதிகாலை 5 மணி அளவில் சரண்யா மற்றும் 2வது மகள் பூவிஷா உடல்களை மீட்டனர். மழையால் கிணற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததால் தேடும் பணி தாமதமானது. இதையடுத்து கிணற்றில் மோட்டார் வைத்து தண்ணீரை இறைத்து கனிஷ்காவின் உடலை தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

பாலவிடுதி போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் சரண்யா கடந்த 2 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்தார் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை குழந்தைகளை குளத்தில் வீசி கொல்ல முயன்றபோது உறவினர்கள் மீட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை மகள்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Related Stories: