பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த அரசு பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி :  புதுச்சேரி லாஸ்பேட்டையில் தனியார் டவுன் பஸ் படிக்கட்டில், உயிரை  பணயம் வைத்து மாணவர்கள் தொங்கியபடி பயணிக்கும் சிசிடிவி காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மாணவர் சிறப்பு  பேருந்துகளை கல்வித்துறை உடனே இயக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளன.

புதுச்சேரியில்  கல்வித்துறை உத்தரவுக்கிணங்க அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 1 முதல் பிளஸ்2 வரையிலான அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. முக்கிய  சாலைகளில் நேற்று காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திராகாந்தி  சதுக்கம், அண்ணா சாலை, மரப்பாலம் சந்திப்பு, உப்பளம் ரோடு ஆகியவற்றில்  போக்குவரத்து ஆங்காங்கே பாதிக்கப்பட்டது.  மாணவர் சிறப்பு பஸ்களை அரசு  இயக்காததால் 9 முதல் பிளஸ் 2 வரையிலான அரசு பள்ளிகளுக்கு செல்லும் ஏழை,  நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் டவுன் பஸ்களில் முண்டியடித்து  சென்றனர்.

தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதால் மற்ற வகுப்புகளின்  மாணவர்களும் அரசு, தனியார் டவுன் பஸ்களில் பள்ளிக்கு செல்லும்  நிலை ஏற்பட்டது. குறிப்பாக பீக் டைம் நேரத்தில் குறைவான பேருந்துகளே  இயக்கியதால் டவுன் பஸ்களில் கூட்டம் முண்டியடித்தது. லாஸ்பேட்டை நாவலர்  நெடுஞ்செழியன் பள்ளி அருகே ஒரு தனியார் பஸ்சின் 2 படிக்கட்டுகள்  மட்டுமின்றி பின்புறமுள்ள மேற்கூரை ஏணியிலும் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி  பயணித்தனர்.  நடத்துனர் எச்சரிக்கைக்குபின் அதிலிருந்த சில மாணவர்கள்  மட்டும் கீழே இறங்கினர். மற்றவர்கள் அனைவரும் படிக்கட்டில் தொங்கி  பயணித்தனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி  மாணவர்களின் பெற்றோரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இதனிடையே இத்தனை மாணவர்களையும் போக்குவரத்து போலீசார் உடனே அடையாளம் கண்டு  அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்ப வேண்டுமென சமூக ஆர்வலர்கள்  காவல்துறை தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளையில் அனைத்து  பள்ளிகளையும் திறந்த கல்வித்துறை, மாணவர் சிறப்பு பஸ்களை முழுமையாக  இயக்காவிட்டாலும் 50 சதவீத பஸ்களையாவது இயக்கி இருக்க வேண்டும். இதில்  கல்வித்துறை அலட்சியம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியையும் முன்  வைத்துள்ளனர். அரசு பள்ளிகளுக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு  வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: