மாவட்ட அளவில் 12ம் ஆண்டாக நடந்தது மூத்தோர் தடகளப் போட்டியில் 200 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு

திருமுருகன்பூண்டி :  திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் 12 ஆம் ஆண்டாக மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி பழங்கரை டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம், அவிநாசி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60 பெண்கள், 140 ஆண்கள் என 200 பேர்கள்  கலந்துகொண்டனர்.

 இவர்களுக்கு 5 கி.மீ நடைபயணம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை காலூன்றி தாண்டுதல், தடை தாண்டி ஓடுதல் ஆகிய போட்டிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டியில் 35 வயதிற்கு மேற்பட்டோர், 40, 45, 50, 55, 60,மற்றும்  60 வயதிற்கு மேல் என போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை பல்வேறு உடற்கல்வி ஆசிரியர்கள் குழுவாக இணைந்து நடத்தி கொடுத்தனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு அவருடன் வந்த மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் கூடவே வந்து வெற்றிபெற உற்சாகப்படுத்தினர்.

துவக்க விழா நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ஆலோசகர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். டீ கல்வி நிறுவங்களின் இயக்குனர் டோரத்தி ராஜேந்திரன் போட்டியை துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த அந்தோணிசாமி, முருகப்பெருமாள், சுரேஷ்குமார், விஜயலட்சுமி ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் தடகளப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தனபால், கீதாமாலதி தொழிலதிபர் வாசுநாதன், கண்ணன், கொங்கு ஆம்புலன்ஸ் தம்பி வெங்கடாசலம் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் ஓய்வுபெற்ற கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் செல்லமுத்து நன்றி கூறினார்.

Related Stories:

More