திருப்பத்தூர் அருகே சுடுகாட்டிற்கு வழி இல்லாததால் சடலம் அடக்கம் செய்ய ஆற்று வெள்ளத்தில் இறங்கி செல்லும் கிராம மக்கள்-தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே சுடுகாட்டிற்கு வழி இல்லாததால், சடலம் அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் ஆற்று வெள்ளத்தில் இறங்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், இருணாப்பட்டு ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக தனி இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. இவர்கள் காலம், காலமாக அங்குள்ள பாம்பாற்றின் குறுக்கே உள்ள வழியாக சுடுகாட்டிற்கு சென்று சடலங்களை புதைத்தும், தகனம் செய்தும் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல், இருணாம்பட்டு ஊராட்சியில் உள்ள பாம்பாற்றிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்நிலையில், நேற்று இருணாபட்டு கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். எனவே, அவரது உறவினர்கள், சடலத்தை நல்லடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது, சுடுகாடு செல்லும் வழி முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது.

ஆனாலும், உயிரை பணையம் வைத்து ஆற்றில் வெள்ளத்தில் சடலத்துடன் இறங்கி சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்தனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் செல்லும் போதெல்லாம் சுடுகாட்டிற்கு செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சுடுகாடு செல்லும் பாதையில் மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: