புதுவை மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்துகிறது மக்கள் நலனுக்காகவே கட்டாய தடுப்பூசி-கவர்னர் தமிழிசை பேட்டி

வில்லியனூர் :  மக்கள் நலனுக்காகவே கட்டாய தடுப்பூசி என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாரையும் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நரிக்குறவர் இன மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து, நரிக்குறவர் இன மக்களின் வீடுகளையும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பார்வையிட்டார். அந்த பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்களை  வழங்கியதுடன் குழந்தைகளையும் தூக்கி கொஞ்சினார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ராமுலு, புதுச்சேரி செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 அதன் பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: ஒதியம்பட்டு பகுதியில் நரிக்குறவர் சமுதாயபெண்கள் கழிப்பறை வசதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நிரந்தரமான கழிப்பறைகள் கட்டுவதற்கு முன்பாக, ஒரு நடமாடும் கழிப்பறையை உடனடியாக நிறுத்தும்படி சுகாதாரத்துறை மற்றும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். மேலும், நிரந்தரமாக கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அதற்கு பின் வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும். முதல்வருடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவு எடுக்கப்படும்.

 புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இது பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 பின்னர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு புதுச்சேரியை புறக்கணிக்கிறது. இதுதொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என்று கூறியுள்ளது குறித்து கவர்னரிடம் கேட்டதற்கு, இது விவாதிக்கும் நேரம் இல்லை. மத்திய அரசு புதுச்சேரி மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் நிர்வாக ரீதியான அனைத்தும் சரியாக நடந்து வருகிறது என்றார்.

Related Stories: