ஆஸ்திரேலிய வல்லுநர்கள் பரபரப்பு தகவல்: ஒமிக்ரான்-டெல்டா இணைந்த அதிசக்தி வாய்ந்த புது வைரஸ்: தடுப்பூசியில் தேவையான மாற்றம் செய்ய வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் அடங்கியதும், உலகில் கொரோனா ஒழிந்து விட்டதாக எண்ணிய நிலையில், ஒமிக்ரான் எனும் புதிய வகை வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், ஒமிக்ரானும் டெல்டாவும் சேர்ந்து அதிசக்தி வாய்ந்த புதுப்புது வகை வைரஸ்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலிய வல்லுநர்கள் புது குண்டை தூக்கி போட்டுள்ளனர். ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. இந்த வைரசால் இதுவரை ஒருவர் கூட இறக்கவில்லை என்றாலும், 50 பிறழ்வுகள் கொண்ட இந்த அதிபயங்கர மாறுபாடு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது முந்தைய டெல்டா வகை வைரசை காட்டிலும் பல மடங்கு வீரியமிக்கதாக இருக்கும், வேகமாக பரவும், தடுப்பூசி பாதுகாப்பை மீறி தாக்கும், இளைஞர்களை அதிகமாக தொற்றும் என தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன. மருத்துவ ரீதியாக இந்த விஷயங்கள் கூறப்பட்டாலும், நடைமுறையில் வைரஸ் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரிய இன்னும் சில வாரங்களாகும்.

இதற்கிடையே, ஒமிக்ரான் போன்ற புது வகை பயங்கர வைரஸ்கள் பலவற்றையும் நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலிய வைரலாஜிஸ்ட் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக வைரலாஜிஸ்ட் பீட்டர் ஒயிட், டவுன்ஸ்வில்லியில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்க ழகத்தின் சுகாதார நிபுணர் ஸ்டீபன் டோப் உள்ளிட்ட அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: ஒமிக்ரான் எனும் புதிய வரை தோன்றியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் வைரஸின் இயல்பு. அது எப்போதும் புதுப்புது வகையாக மாறிக் கொண்டே இருக்கும். அவைகளின் மாற்றங்கள் எப்படிப்பட்டது, நோய் எதிர்ப்பு திறனை எந்தளவுக்கு பாதிக்கும், அதன் வீரியம் எப்படி என்பதைதான் நாம் தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் தடுப்பூசிகள் நம்மை புதுப்புது வகை வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்குமா என்ற கேள்விக்கு பதில் நிச்சயம் ‘ஆம்’ என்று தான் கூற வேண்டும். ஆனால் அது தற்போதைக்கு மட்டும்தான். எதிர்காலத்தில் உருவாகும் தடுப்பூசிகள் இப்போது இருக்கும் தடுப்பூசிகளை வீழ்த்தக் கூடிய வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை.

எனவேதான் தடுப்பூசியில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம். வைரஸ்கள் மாறிக் கொண்டே இருப்பது நிச்சயம். ஒமிக்ரானும், டெல்டாவும் சேர்ந்து புதிய வகையான அதிபயங்கர வகை வைரஸ் உருவாகும் வாய்ப்புகள் நிச்சயம் மறுப்பதற்கில்லை. அதுவும் ஒரு காலத்தில் நடக்கத்தான் போகிறது. எனவே, அவைகளுக்கு ஏற்ப தடுப்பூசியில் காலத்திற்கேற்ற புதுப்பிப்புகள் செய்யப்பட வேண்டும். எந்த நேரத்திலும் தடுப்பூசியை குறைத்து மதிப்பிடக் கூடாது. வைரஸ் தொற்று மூலம் நமக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி புதிய வகை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும். என்றாலும், வைரஸ் தொற்றால் இறப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் இறப்புக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் மிக மிக குறைவாகவே இருக்கும். தடுப்பூசிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் பட்சத்தில், அனைத்து வகை வைரஸ்களிடமிருந்தும் நம்மை தடுப்பூசிகள் பாதுகாக்கும். தற்போதைய நிலையில், நாம் அனைவரும் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்வதே ஒரே வழி. பிற கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக, தடுப்பூசிகள் மூலம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

எதையும் மாத்தாதீங்க…

மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கான உலக சுகாதார நிறுவன இயக்குநர் தகேஷி கசாய் கூறுகையில், ‘‘பயண தடை விதிப்பதாலும், எல்லைகளை மூடுவதாலும் வைரஸ் தொற்று பரவலை தள்ளிப் போடலாமே தவிர, புதிய அலையை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும். டெல்டா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வைரசுக்கு எதிராக அடித்தளமாக இருக்க வேண்டும். அதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்’’ என்றார். இதற்கிடையே, ஒமிக்ரான் குறித்து கூடுதல் தகவல் அறியவும், வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தவும் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் தென் ஆப்ரிக்கா விரைந்துள்ளனர்.

6 தடுப்பூசிகளின் பூஸ்டர் பாதுகாப்பானது

அஸ்ட்ரஜெனிகா, பைசர்-பயோஎன்டெக், நோவாவாக்ஸ், ஜான்ஸ்சன், மாடர்னா, வால்னிவா, கியூர்வாக் ஆகிய 6 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்கள் பாதுகாப்பானதாக இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 மாத ஆய்வின் அடிப்படையில் அஸ்ட்ரஜெனிகா பூஸ்டர் தடுப்பூசி 79 சதவீதமும், பைசர் 90 சதவீதமும் செயல்திறனுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் டோஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மரணத்தில் இருந்தும் காப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: