இருதரப்பு வாதங்களையும் கேட்காமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை தனது நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இது ஒற்றை தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிருந்தார்.

இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடத்தப்படும் என 2ம் தேதி அறிவிக்கப்பட்டு, அது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற அதிமுகவின் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் கே.சி.பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

சங்கங்கள் பதிவு சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல், பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருக்கிறார். உறுப்பினர்கள் முறைப்படுத்தப்படவில்லை, உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையில் முறைகேடு நடந்துள்ளது, வாக்காளர் பட்டியல் சரியாக தயாரிக்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.  

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்ட பின்பு தான் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் கே.சி.பழனிசாமிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர், ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில், 5 நாட்களில் தேர்தல் நடத்துகிறார்கள் என்று தெரிவித்தார். நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், 25,000 அதிமுக தொண்டர்கள் இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

போட்டியே இல்லாமல் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவசர கதியில் தேர்தலை நடத்துகின்றனர் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்காமல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தான் விசாரிக்க தனக்கு உரிய அவகாசம் வேண்டும் என கூறிய நீதிபதி, உடனே இந்த வழக்கை தாங்கள் நடத்த வேண்டும் என்றால் வழக்கை தள்ளுபடி செய்துவிடுவேன் எனவும் தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 7ம் தேதிக்குள் ஈபிஎஸ், ஓபிஎஸ், தேர்தல் அதிகாரி சார்பில் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

More