மக்களை தேடி மருத்துவம்: மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வீடுகளுக்கு சென்று சிகிச்சை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை நீர் சூழ்ந்த ராம்நகர், ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுகாதார ஊழியர்கள் படகு மூலம் வீடுகளுக்கு சென்று பரிசோதித்து மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த 25ம்தேதி பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அருகே ரஹ்மத் நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கடந்த ஒருவாரமாக மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ராம்நகர், ரஹ்மத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு உள்ளிட்ட நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முடியவில்லை. இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி தலைமையிலான செவிலியர்கள் ரஹ்மத் நகர் பகுதியில் காவல்துறை சார்பில் இயக்கப்படும் படகு மூலம் வீடுகளுக்கு சென்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம்,

சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதற்காக தமிழக அரசு மற்றும் மாநகராட்சி சுகாதார செவிலியர்களுக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: