நியூசிலாந்தை வீழ்த்த கோஹ்லி உள்ளே.... வெளியே யார்? இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்

மும்பை: கேப்டன் கோஹ்லிக்கு பதில் வெளியில் உட்கார வைக்கப்படும் வீரர் யார் கேள்வி எழுந்துள்ள நிலையில் 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட்  டிராவில் முடிந்தது. அதுவும் இந்தியாவின் சுழலை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நியூசிலாந்துக்கு தோல்வி உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி 9 ஒவர்களில் விக்கெட் விழாமல் நியூசி பந்து வீச்சாளர்கள் அஜாஸ் படேல், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா சமாளித்து, இந்திய அணிக்கு ஏமாற்றத்தை தந்தனர். அதனால் 2வது டெஸ்ட்டுக்கு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணியில் பெரிய மாற்றம் இருக்காது.

ஆனால்  நூலிழையில் வெற்றியை நழுவ விட்ட இந்திய அணியில் கட்டாயம் மாற்றம் இருக்கும். காரணம் ஓய்வில் இருந்த கேப்டன் கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதனால் அவருக்கு பதில் வெளியே உட்கார வைக்கப் போகும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் பெயர்தான் ‘வெளியே’ பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் அவர் அறிமுகமான முதல் டெஸ்ட்டிலேயே முதல் இன்னிங்சில் சதம், 2வது இன்னிங்சில் அரைசதம் விளாசி கவனிக்க வைத்துள்ளார்.

அடுத்து சுமாராக விளையாடிய முதல் டெஸ்ட் கேப்டனும், மும்பை வீரருமான ரகானே, புஜாரா ஆகியோர் ஆகியோர் சீனியர்கள் என்பதால் அவர்களை உட்கார வைக்க யோசிக் கூடும். கழுத்து வலியால் அவதிப்படும் விக்கெட் கீப்பர் விருத்திமானுக்கு ஓய்வு தரப்படலாம். அதனால் இன்னொரு விக்கெட் கீப்பரான பரத் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார். அப்படி நடந்தால் கூடவே தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் விலக்கப்படுவார் என்ற பேச்சு உள்ளது. அவருக்கு பதில் பரத் தொடக்க ஆட்டக்காரராக களம் காணக் கூடும். ஆக கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்புவதால், நியூசியை வீழ்த்தி தொடர கைப்பற்ற வேண்டும் என்பதை விட வெளியே உட்காரப்போகும் வீரர் யார்? என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

* புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் உடன் முதல்முறையாக இணைகிறார் கேப்டன் கோஹ்லி

* மழைக்காலம் முடிந்த பிறகும் மும்பையில் வந்த திடீர் மழை காரணமாக வீரர்கள், நேற்று உள் அரங்கங்களில் பயிற்சி மேற்கொண்டார்கள்.

* கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது அஷ்வின் வாய்ப்பை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. காரணம் இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வினுக்கு வாய்ப்பு தராத வரலாற்றுக்கு சொந்தக்காரர் கோஹ்லி.

* கடைசியாக நேற்றிரவு உலவியத் தகவல்கள் மயாங்க் தான் உட்கார வைக்கப்படுவார் என்று சொல்கின்றன.

Related Stories: