மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் பணி நீக்கம்

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த போராசிரியருக்கு எதிராக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு பகுதியில், தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில பேராசிரியராக தமிழ்ச்செல்வன் (40) பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் வகுப்பின்போது, இவர் மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி, பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடும் மனஉளைச்சல் அடைந்த அவர்கள்,  சக மாணவர்களிடம் கூறினர். இதனால், ஆத்திரமடைந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மதியம் கல்லூரி வளாகத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரவாயல்  உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் ஏராளமான கோயம்பேடு போலீசார், அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். பின்னர், உதவி ஆணையர் ரமேஷ் பாபு மற்றும்  கல்லூரி நிர்வாகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிய தமிழ்ச்செல்வனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து, கமிட்டி அமைத்து, சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை செய்த பிறகு, போலீசில் புகார் அளிக்கப்படும் என,  கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: