நூலிழையில் தப்பிய நியூசிலாந்து: முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது: இந்தியா ஏமாற்றம்

கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் முதல் இன்னிங்சில் இந்தியா 345 ரன் குவித்த நிலையில் நியூசிலாந்து 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 49 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.  இதைத் தொடர்ந்து 284 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன் எடுத்திருந்தது. கை வசம் 9 விக்கெட் இருக்க நியூசிலாந்து வெற்றிக்கு இன்னும் 280 ரன் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. டாம் லாதம் 2 சாமர்வில்லி (0) இருவரும் துரத்தலை தொடர்ந்தனர்.

பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது. சாமர்வில்லி 36 ரன் எடுத்து (110 பந்து 5 பவுண்டரி) உமேஷ் வேகத்தில் கில் வசம் பிடிபட்டார். அடுத்து லாதமுடன் கேப்டன் வில்லியம்சன் இணைந்தார். லாதம் 52 ரன் (146 பந்து 3 பவுண்டரி) எடுத்து அஷ்வின் சுழலில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராஸ் டெய்லர் 2 ஹென்றி நிகோல்ஸ் 1 ரன்னில் வெளியேற நியூசிலாந்து திடீர் சரிவை சந்தித்தது. வில்லியம்சன் 24 ரன் எடுத்து (112 பந்து 3 பவுண்டரி) ஜடேஜா சுழலில் ஆட்டமிழக்க நியூசிலாந்து 69.1 ஓவரில் 128 ரன்னுக்கு 6வது விக்கெட்டை பறிகொடுத்து பரிதவித்தது. 10 ரன்னுக்கு 4 விக்கெட் சரிந்ததால் இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். நியூசிலாந்தை விரைவில் சுருட்டி வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் இந்தியா தாக்குதலை தீவிரப்படுத்தினாலும் நியூசி. வீரர்கள் டிரா செய்ய போராடினர்.

அறிமுக வீரரான ரச்சின் ரவிந்திரா ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க அவருக்கு உறுதுணையாக நின்று நிதானமாக கட்டை போட்ட கைல் ஜேமிசன் 5 ரன் (30 பந்து) டிம் சவுத்தீ 4 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து 155 ரன்னுக்கு 9வது விக்கெட்டை இழந்தபோது குறைந்தபட்சம் 9 ஓவர் மிச்சம் இருந்ததால் இந்தியா வெற்றி பெறுவது உறுதி என்றே தோன்றியது.

ஆனால் ரச்சின் ரவிந்திரா - அஜாஸ் படேல் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 42 பந்துகளை சமாளித்து இந்திய பவுலர்களின் பொறுமையை சோதித்தது. நியூசிலாந்து 98 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மேற்கொண்டு ஆட்டம் தொடர வாய்ப்பில்லை என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு நூலிழையில் நழுவ முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. ரச்சின் 18 ரன் (91 பந்து 2 பவுண்டரி) அஜாஸ் 2 ரன்னுடன் (23 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 அஷ்வின் 3 அக்சர் உமேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் சதம் 2வது இன்னிங்சில் அரை சதம் விளாசி சாதனை படைத்த ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க 2வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் டிச. 3ம் தேதி தொடங்குகிறது.

Related Stories:

More