ஆவடியில் 20 செ.மீ. கொட்டித்தீர்த்த கனமழை சாலை, வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: அமைச்சர் நாசர் ஆய்வு

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை விடிய, விடிய வெளுத்து வாங்கியதால் சாலை வீடுகளில் வெள்ளம் சூழ்துள்ளது. இதனை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. ஆவடி பகுதியில் மட்டும் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், முக்கிய நெடுஞ்சாலைகள், தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடியது. மேலும், வீடுகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதித்தது. குறிப்பாக, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர், ஸ்ரீராம் நகர், நேரு நகர், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், தென்றல் நகர், பாரதி நகர், பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், முல்லை நகர், சித்தேரிக்கரை, கவரப்பாளையம், சிந்து நகர், திருநின்றவூர், அன்னை இந்திரா நகர், பெரியார் நகர், சுதேசி நகர், கன்னிகாபுரம், முத்தமிழ் நகர் மற்றும் நடுக்குத்தகை, நெமிலிச்சேரி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மேலும், சில வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில இடங்களில் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, புதிய ராணுவ சாலை, சி.டி.எச்.சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளம் சாலைகளில் ஆறாக ஓடியது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு சென்றனர். நெடுஞ்சாலைகளில் ஓடிய மழை வெள்ளம் சில கடைக்குள் புகுந்து உள்ளது. இதனால், பல பொருட்கள் சேதம் அடைந்தன.

தகவலறிந்த ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் இந்த பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு மழைநீரை அகற்ற உத்தரவிட்டனர். பின்னர், மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி, பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த இடங்களில் டீசல் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் தெருக்கள், வீடுகளை சுற்றியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Related Stories: