நாளை 12 வது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்: இதுவரை நடைபெற்ற 11 மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16.72 பேருக்கு தடுப்பூசி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நடைபெற்ற  11 மெகா கோவிட் தடுப்பூசி  சிறப்பு முகாம்களின் மூலம்  16.72  இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  28.11.2021  ஞாயிற்றுக்கிழமை அன்று  200 வார்டுகளில் நடைபெறவுள்ள 12  வது மெகா கோவிட் தடுப்பூசி  சிறப்பு முகாமில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை கோவிட் பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுமக்களுக்கு கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், பொதுமக்கள் வெளியில் வரும் பொழுது முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும், தவறாமல் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 26.08.2021 அன்று  ஒரு வார்டிற்கு 2  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு  1,35,865 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக செயல்படுத்தி மாநிலம் முழுவதும் மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நடத்திட உத்தரவிட்டார். அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நாட்களில் வார்டிற்கு 2 வீதம் 400 நிரந்தர மருத்துவ முகாம்கள், வார்டிற்கு 6 வீதம் 1200 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.   இதுவரை நடத்தப்பட்ட 11 மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 16,72,673  கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.   தொடர்ந்து, நாளை (28.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 முகாம்களுடன் 12 வது கோவிட் மெகா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

 இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்  முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 9,60,465 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  நடைபெறவுள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக  தெரிந்துகொள்ளலாம். எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: