கனமழையால் பாறைகள் சரிவு, மரங்கள் சாய்ந்தன கொடைக்கானல் சாலையில் இரவு பயணம் தவிர்க்கவும்

*சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால் பெரும்பாறை - சித்தரேவு மலைச்சாலையில் ராட்சத பாறை சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூம்பாறையில் சாலையின் குறுக்கே விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. பாறைகள் விழுவதையடுத்து கொடைக்கானல் சாலையில் சுற்றுலாப்பயணிகள் இரவுப்பயணத்தை தவிர்க்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழைக்கு, கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை - சித்தரேவு மலைச்சாலையில் ஏணிக்கல் என்ற இடத்தில் திடீரென 2 ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் கிரேன் மூலம் பாறைகளை சுற்றியிருந்த மண் சரிவினை அகற்றி சிறிய ரக வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதையை சரிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பாறைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதேபோல் மஞ்சள்பரப்பு - பெரும்பாறை இடையே சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரத்தினை பொதுமக்கள் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கொடைக்கானல் மேல்மலையில் உள்ள பூம்பாறை பகுதியில் பெய்த கனமழைக்கு சாலையின் குறுக்கே பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்பே போக்குவரத்து சீரானது.

கனமழை காரணமாக மேலும் பல இடங்களிலும் மரங்கள், பாறைகள் சாய்ந்து விழுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் மலைச்சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகளிடம் வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories:

More