தாம்பரத்தில் பரபரப்பு; கத்தியுடன் சுற்றிய 4 ரவுடிகள் கைது: போதை ஊசி, மாத்திரை பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் காவல் நிலைய எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், சைக்கிள்களில் வழக்கமான ரோந்து பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். தாம்பரம் மேம்பாலம் அருகே பழைய சோதனைச்சாவடி  அருகில் சந்தேகப்படும்படி 3 பைக்குகளில் நின்றுகொண்டிருந்த கும்பலிடம் போலீசார் விசாரிக்க சென்றனர்.  போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பியோட முயன்றது. இதில் 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ஒருவர் இடுப்பில் ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தங்கதுரை (20), நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த அலன்ராஜ் (26), மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த பிரதீப் (21), குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ்வரன் (25) என்பதும் பெயின்டிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும்,  இவர்கள் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதில், சரித்திர பதிவேடு குற்றவாளியான லோகேஷ்வரன் மீது பல்வேறு வழக்கு இருப்பதும், மீதமுள்ள 3 பேர் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை காவல் நிலையங்களில் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

 இதையடுத்து இவர்களிடம் இருந்து கத்தி, 2 பைக், போதை மாத்திரை, போதை ஊசி பறிமுதல்  செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  தப்பிய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: