சேலத்தில் அதிகாலையில் பயங்கரம்; சிலிண்டர் வெடித்து தீயணைப்பு அதிகாரி உள்பட 5 பேர் பலி.! 6 வீடுகள் தரைமட்டம்

சேலம்: சேலத்தில் நேற்று காலை வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில், 6 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில், தீயணைப்புத்துறை அதிகாரி அவரது மனைவி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.  சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன்விட்டல் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜன் (62). இவரது அண்ணன் ராமகிருஷ்ணன் (65). இவர்களுக்கு சொந்தமாக 5 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் வெங்கட்ராஜனும், மற்றவற்றில் எலக்ட்ரீசியன் கோபி (52), கணேசன் (37), முருகன் (45), மோகன்ராஜ் (40) ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தனர். இவர்களது வீட்டிற்கு அருகிலேயே சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அதிகாரியாக (போக்குவரத்து) பணியாற்றி வந்த பத்மநாபன் (48) சொந்தவீடு கட்டி மனைவி தேவி (40), மகன் லோகேஷ் (18) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு கோபியின் வீட்டில் அவரது தாயார் ராஜலட்சுமி (80) எழுந்து சமையல் அறையில் லைட் போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சமையல் சிலிண்டரில் காஸ் கசிந்து இருந்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அடுத்தடுத்து 6 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. வெடிகுண்டு வெடித்தது போல், பயங்கர சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தெருவுக்கு ஓடி வந்தனர். தகவலறிந்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  50க்கும் மேற்பட்ட போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளின் கான்கிரீட் துண்டுகள், 50 மீட்டர் தூரத்திற்கு சிதறி, பக்கத்தில் இருந்த மேலும் 4 வீடுகளில் விழுந்து சேதமடைந்தது. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், இடிபாடுகளில் சிக்கியும் தீயில் கருகியும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபியை முதலில் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது தாயார் ராஜலட்சுமி, தீயணைப்பு துறை அதிகாரி பத்மநாபன் மகன் லோகேஷ் உட்பட 10 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பக்கத்து வீட்டிற்கு பால் கொடுத்துவிட்டு தெருவில் சென்ற பால் வியாபாரி கோபால் (70), எதிர் வீட்டில் வாசலை பெருக்கிக் கொண்டிருந்த தனலட்சுமி (64) ஆகியோரும் படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ராஜலட்சுமி உயிரிழந்தார்.

மற்ற 12 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தரைமட்டமான வீடுகளின் இடிபாடுகளில், வெளியே வர முடியாத நிலையில் தீயணைப்பு அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி, முருகனின் மகன் கார்த்திக் ராம், மகள் பூஜா, மூதாட்டி எல்லம்மா ஆகிய 5 பேர் சிக்கியிருந்தனர். இவர்களில் சிறுமி பூஜா அலறல் மட்டும் கேட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றி காலை 9.50 மணிக்கு சிறுமி பூஜாஸ்ரீயை மூன்றரை மணி நேரத்திற்குப்பிறகு உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தீயணைப்பு அதிகாரி பத்மநாபன், அவரது மனைவி தேவி, முருகனின் மகன் கார்த்திக்ராம், மூதாட்டி எல்லம்மா ஆகியோர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. காலை 7 மணிக்கு ெதாடங்கி பிற்பகல் 3 மணி வரை 8 மணி நேரம் மீட்பு பணி நடந்தது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து மற்றும் 5 பேர் உயிரிழப்பு சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று மாலை விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Related Stories: