காட்பாடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்-பொதுமக்கள் அதிருப்தி

வேலூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் உடைந்துள்ளது. ஆம்பூர் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைப்லைன் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீரமைக்கும் வரை குடிநீர் சப்ளை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் நீராதாரத்தை பயன்படுத்தி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் மாநகராட்சியில் மண்டல வாரியாக உள்ள குடிநீர் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் காட்பாடி மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு, டிகே.புரம் பகுதிக்கு விநியோகம் செய்யும் தண்ணீர் நிறம்மாறி, அசுத்தமாக உள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. காட்பாடி, விருதம்பட்டு மோட்டூர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, தற்காலிகமாக மாற்று ஏற்பாடாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடிநீர் சுத்திரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்கள் நோய் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சுத்திகரித்து குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: