திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மழைநீர், கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் தூய்மைப் பணியை தொடங்க நடவடிக்கை-குறைதீர்வு நாளில் பொதுமக்கள் கோரிக்கை மனு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற   மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.இதில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்னைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் என 480 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் பொதுமக்கள் அளித்த மனுவில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, ஆதரவற்ற விதவை சான்று, அரசு வேலை, கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வேண்டி, உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து உள்ளது. இதில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. அந்த வீடுகளுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும், வீடு இழந்தவர்கள் மனு அளித்தனர். மேலும் மழையினால் வீடு விழுந்து விழுந்தவர்களுக்கு உடனடியாக புது வீடு கட்டித்தரக்கோரி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

திருப்பத்தூர் பாச்சல் ஊராட்சி ஒன்றியம் என்ஜிஓ நகரில் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் மழைநீர் அப்புறப்படுத்தாமல் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர் அந்த மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அதேபோல சந்திரசேகர் அவ்வை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழலில் உள்ளதாகவும் அந்த மழை நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கலெக்டர் (பொறுப்பு) தங்கய்யாபாண்டியன் மேலும் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கால்நடைகள் அட்டகாசம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வந்தனர். அப்போது தெருவோரம் சுற்றி திரியும் கால்நடைகள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்குக்குள் சென்று அங்கு மனு அளித்து வந்த பொது மக்களை அச்சுறுத்தியது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். கால்நடைகள் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: