பாபநாசம் வட்டாரத்தில் மீண்டும் மழை சம்பா, தாளடி நாற்றுகள் தண்ணீரில் மூழ்கின-விவசாயிகள் வேதனை

கும்பகோணம் : கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டாரத்தில் மீண்டும் தொடர்ந்த மழையால் வயல்களில் வெள்ளநீர் புகுந்தது. இதில் சம்பா தாளடி நாற்றுகள் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரம் விடாது பெய்த தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அதிகமாக விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் மூழ்கி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மழை வெள்ள நீரை வயலிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் கடந்த 4 நாட்களாக மழை முழுவதுமாக இல்லாத நிலையில். ஒரு சில இடங்களில் வயல்களில் தேங்கிய மழை நீர் வடிய தொடங்கியது. இதையடுத்து விவசாயிகள் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சிகளிலும், சாகுபடி பணிகளிலும் மும்முரம் காட்டினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாபநாசம் வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மீண்டும் வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்கள் எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பாபநாசம் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மழைநீர் வடிந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் விளைநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: