சையத் முஷ்டாக் அலி கோப்பை: தமிழகம் மீண்டும் சாம்பியன்: கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி

டெல்லி: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன்  தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழகம் - கர்நாடகா மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சை தேர்வு செய்தது. கர்நாடகா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. அந்த அணியின்  அபினவ் மனோகர் அதிகபட்சமாக 46 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பிரவீன் துபே 33 ரன் (25பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெகதீஷா சுசித், கருண் நாயர் தலா 18 ரன் எடுத்தனர். கேப்டன் மணிஷ் பாண்டே 13 ரன்னில் வெளியேறினார்.

தமிழக பந்துவீச்சில்  சாய் கிஷோர் 4 ஓவரில் 12 ரன் மட்டுமே   விட்டுக்கொடுத்து 3 விக்கெட் அள்ளினார். நடராஜன், சந்தீப் வாரியர்,  சஞ்ஜெய் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களமிறங்கியது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹரி நிஷாந்த் 23 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 9 ரன்னில் ஆட்டமிழக்க, தமிழகம் பின்னடைவை சந்தித்தது. கேப்டன் விஜய் சங்கர் 18 ரன், நாராயண் ஜெகதீசன் 41 ரன் (46 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி 16வது ஓவரின் முதல் 2 பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கர்நாடகா கை ஓங்கியது. கடைசி 3 ஓவரில் 36 ரன் தேவை என்ற நிலையில் சஞ்ஜெய், முகமது தலா 5 ரன்னில் வெளியேறியது தமிழக அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. 19வது ஓவரில் தமிழகத்துக்கு 14 ரன் கிடைக்க, பரபரப்பான கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டது.

பிரதீக் ஜெயின் வீசிய அந்த ஓவரை சாய் கிஷோர், ஷாருக்கான் எதிர்கொண்டனர். முதல் பந்தை சாய் பவுண்டரிக்கு விரட்ட, அடுத்த 4 பந்தில் 2 வைடு உள்பட 7 ரன் கிடைத்தது. இதனால், கடைசி பந்தில் தமிழக வெற்றிக்கு 5 ரன், சூப்பர் ஓவருக்கு 4 ரன் தேவை என்ற இக்கட்டான நிலையில், ஷாருக்கான் இமாலய சிக்சர் விளாசி த்ரில் வெற்றியை வசப்படுத்தினார். தமிழகம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு  153 ரன் எடுத்து முஷ்டாக் அலி கோப்பையை தக்கவைத்தது. ஷாருக்கான் 33 ரன் (15பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), சாய் கிஷோர் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கர்நாடகா தரப்பில் கரியப்பா 2,  பிரதீக், வித்யாதர், கருண் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஷாருக்கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: