வைகை அணையில் விபரீதமாக செல்பி எடுக்கும் வாலிபர்கள் : கரணம் தப்பினால் மரணம்: போலீசார் கவனிப்பார்களா?

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் முன்புறம் ஆற்றுப்பகுதியில் விபரீதமாக நின்று செல்பி எடுக்கும் வாலிபர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், அவ்வப்போது நீர்வரத்தை பொறுத்து உபரிநீரும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வைகை அணைக்கு முன் உள்ள ஆற்றில் யாரும் செல்பி எடுக்கவோ, துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் தற்போது அணையில் இருந்து 4,490 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வைகை அணை இருபூங்காவை பிரிக்கும் பாலத்தை முழ்கி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பாலத்தை சுற்றுலாப்பயணிகள் கடக்க கூடாது என்பதற்காக பாலத்தின் இருபகுதிகளிலும் முட்செடிகள் வைத்து மறித்துள்ளனர். இந்நிலையில், வைகை அணை பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் இளைஞர்கள் அந்த பாலத்தில் ஆற்றின் ஓரத்தில் நின்ற செல்பி எடுத்து வருகின்றனர். இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தடுப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் முள்செடிகளை அகற்றி, ஆற்றின் ஒரத்தில் நின்று செல்பி எடுத்தும் தண்ணீரை கையில் எடுத்து முகத்தை கழுவியும் வருகின்றனர். ஒருசில இளைஞர்கள் இவ்வித செயல்களில் ஈடுபடுவதால் மற்றவர்களும் இதேபோல் செயல்களை செய்து வருகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்தப்பகுதியில் பொதுப்பணித்துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: