சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே 5,000 பக்தர்கள் சாமி தரிசனம்!: இருவழிப்பாதையை திறக்க தேவசம் போர்ட் முடிவு..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இருவழிப்பாதையை திறக்க தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு மறுநாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பக்தர்கள் தினமும் 30,000 பேரை தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், மழை காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்தனர்.

தற்போது மழை குறைந்திருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காலையில் நடை திறக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே சுமார் 5,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் கடந்த 6 நாட்களில் சபரிமலையில் அரவண பாயாசம், அப்பம் ஆகியவை மட்டுமே 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பாச்சிமேடு, நீலிமலை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது.

Related Stories: