டிக்கெட் வாங்கியவர்கள் மழைக்கு பிறகு வரலாம் திருப்பதி தேவஸ்தானத்தில் மழையால் ரூ.4 கோடி சேதம்: அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை: ‘கனமழையால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.4 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்கள் மழைக்கு பிறகு வரலாம்,’ என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்துள்ளார். திருப்பதியில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழைால், ஏழுமலையான் கோயில் உள்ள பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் கடந்த 17 முதல் 19ம் தேதி வரை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கனமழையால் சேஷாசலம் மலைப் பகுதியில் உள்ள அனைத்து அணைகளும், தடுப்பணைகளும் நிரம்பியது. மேலும், மலைப்பாதையில் புதிதாக பல இடங்களில் அருவிபோல் வெள்ளம் கொட்டுகிறது.

இதனால், திருமலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ரூ.4 கோடி பொருட்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்து உள்ளன. முதல் மலைப்பாதையில் உள்ள அக்கால கோயிலில் உள்ள தற்காப்பு சுவர் சேதமடைந்ததோடு நான்கு பகுதிகளில் பாறைகளும் சரிந்தன. தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி, பாறைகளை அகற்றி, தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

2வது மலைப்பாதையில் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 5 பகுதிகளில் தற்காப்பு சுவர்கள் சேதமடைந்தன. இந்த மலைப் பாதையிலும் பாறைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரடைந்துள்ளது. திருமலை நாராயணகிரியில் உள்ள பக்தர்கள் ஓய்வறை ஒட்டியுள்ள பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 3 அறைகள் சேதமடைந்துள்ளன. கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் கனமழையால் வரமுடியாத நிலையில், மழை நின்ற பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: