ஒன்றிய அமைச்சர் பதவி பறிப்பு, வழக்குகள் வாபஸ் உட்பட விவசாயிகள் 6 புதிய நிபந்தனை: கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

லக்னோ: டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் 6 புதிய நிபந்தனைகளை ஒன்றிய அரசுக்கு விதித்துள்ளனர். இவற்றை நிறைவேற்றும் வரையில் போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். இதனால், டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஒன்றிய அரசின் இந்த முடிவை வரவேற்ற விவசாயிகள், போராட்டத்தை கைவிடவில்லை. நாடாளுமன்றத்தில் 3 சட்டங்களும் முறைப்படி நீக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

மேலும், தங்களின் பிற கோரிக்கைகள் குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போராட்டங்களை நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் டெல்லி சிங்கு எல்லையில் நேற்று நடந்தது. இதில், திட்டமிட்டபடி போராட்டங்கள் தொடரும் என முடிவு எடுத்திருப்பதாக விவசாய சங்க தலைவர் பல்பில் சிங் ரஜேவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து ஆலோசித்தோம். அதோடு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. எங்களின் பிற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டங்கள் தொடரும். இது தற்போதைய முடிவுதான். வரும் 27ம் தேதி நாங்கள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போதைய நிலையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

மேலும், போராட்டத்தை கைவிடுவதற்கு ஒன்றிய அரசிடம் விவசாய சங்கங்கள் புதிதாக 6 நிபந்தனைகளை, கோரிக்கைகளாக முன் வைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:

* குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதற்கான தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்.

* மின்சார மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.

* லக்கிம்பூர் கேரி வன்முறைக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

* போராட்டம் நடத்தியதற்காக விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும்.

* பயிர்கழிவுகள் எரித்தற்காக போட்டப்பட்ட வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

* போராட்டத்தில் பலியான 750க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு திறந்த கடிதமும் அனுப்பி உள்ளனர்.

* சமாஜ்வாடி சந்தேகம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் அவை மீண்டும் கொண்டு வரப்படும் என ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவும், உன்னாவ் பாஜ எம்பி சாக்‌ஷி மகராஜும் கூறியுள்ளனர். இதை சுட்டிக்காட்டி சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அவர்களின் இதயம் தூய்மையாக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 2022 சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகு இந்த 3 சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம்,’ என அச்சம் தெரிவித்துள்ளது.

* 24ம் தேதி ஒப்புதல்

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை வரும் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், நாளை மறுதினம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த போராட்டங்கள்

விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்த அடுத்தக்கட்ட போராட்டங்களின் விவரம்:

* உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் இன்று ஏற்கனவே திட்டமிட்டப்படி மகா பஞ்சாயத்து நடைபெறும்.

* விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடையும் நாளான வரும் 26ம் தேதி, டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் விவசாயிகள் பெருமளவில் கூடி பல்வேறு போராட்டங்களை நடத்துவார்கள்.

* வரும் 29ம் தேதி முதல் குளிர்கால கூட்டத் தொடர் நடக்கும் அனைத்து நாட்களிலும், 500 விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் டிராக்டர் பேரணி செல்வார்கள்.

Related Stories: