எதிரிகளை துவம்சம் செய்யும் அதிநவீன போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ கடற்படையில் சேர்ப்பு

மும்பை: ராணுவத்தை முழு அளவில் பலப்படுத்தி வரும் ஒன்றிய அரசு, உள்நாட்டிலேயே உள்நாட்டு தொழில்நுட்பத்தில் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ஆயுதங்கள் தயாரிப்பதை தீவிரமாக செய்து வருகிறது. சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’, அடுத்தாண்டு கடற்படையில் சேர்ப்பதற்கான வெள்ளோட்டத்தை சந்தித்து வருகிறது. இதேபோல், ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ என்ற அதிநவீன போர்க்கப்பலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் 7,400 டன்  எடையும்  கொண்டது. மும்பை கப்பல் கட்டும் தளத்தில்  கட்டப்பட்ட இந்த போர்க்கப்பலை, மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘பொறுப்பில்லாத சில நாடுகள் (சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு) சர்வதேச கடல்சார் விதிகளுக்கு மாறாக ஆதிக்க நோக்குடனும், பாரபட்சமாகவும் செயல்படுகின்றன. சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு தங்கள் இஷ்டப்படியும்  பாரபட்சமாகவும் அவை திரித்து விளக்கம் தருகின்றன. இந்தோ- பசிபிக் கடல் பிராந்தியம் உலக நாடுகள் அனைத்துக்கும் முக்கியமானது. இதன் வழியாகத்தான் உலகின் மூன்றில் 2 பங்கு எண்ணைய் கப்பல்கள் செல்கின்றன. 3ல் ஒரு பகுதி சரக்கு கப்பல்களும் செல்கின்றன. இந்த பிராந்தியத்தில் இந்தியா முக்கிய நாடு என்பதால், இந்த கடற்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படைக்கு முக்கிய பங்கு உள்ளது. அதை நிலைநாட்டும் திறன் கடற்படைக்கு உள்ளது,’’ என்றார்.

ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இடம் பெற்றுள்ள அதிநவீன ஆயுதங்கள்:

* தரையில் உள்ள இலக்குகளையும், வானில் உள்ள இலக்குகளையும் தகர்க்கும் சூப்பர்சோனிக் ஏவுகணைகள். இவை ஒலியைவிட வேகமாக பாயந்து செல்லும்.

* குறுகிய மற்றும் நீண்டதூர இலக்குகளை துல்லிமாக சுட்டுத் தள்ளும் பீரங்கிகள்.

* நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகள்.

* அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள், மின்னணு கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகள்.

* 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள்.

* விமானங்கள், கப்பல்களை தகர்க்கும் நிர்பய், பிரம்மோஸ், பாராக் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள்.  

* இந்திய கடற்படையில் இணைந்த அதிநவீன போர்க்கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், மும்பை கடற்படை தளத்தில் கம்பீரமாக நிற்கிறது.

Related Stories: