ஆளுநருடன் நேற்றிரவு முதல்வர் அசோக் கெலாட் சந்திப்பு; ராஜஸ்தானில் இன்று காங்கிரஸ் புதிய அமைச்சரவை பதவியேற்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், நேற்றிரவு அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. 15 அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில் அவர்களில் 4 பேர் சச்சின் ஆதரவாளர்கள், ஒருவர் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் நிலவி வந்த நிலையில், தற்போது முதல்வர் அசோக் கெலாட் அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

 அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அசோக் கெலாட் வசம் கொடுத்துள்ளனர். அதையடுத்து முதல்வர் கெலாட், நேற்றிரவு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ெதாடர்ந்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து, தற்போதைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘புதிய அமைச்சரவையில் 15 எம்எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். இவர்களில் 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், நான்கு பேர் ராஜாங்க அமைச்சர்களாகவும் இருப்பார்கள்.

இன்று மாலை 4 மணிக்கு ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. கேபினட் அமைச்சர்கள் பட்டியலில் ஹேமாராம் சவுத்ரி, மகேந்திரஜித் மால்வியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா, மம்தா பூபேஷ், பஜன்லால் ஜாதவ், திகாராம் ஜூலி, கோவிந்த் ராம் மேக்வால் மற்றும் ஷகுந்தலா ராவத் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஜாஹிதா கான், பிரிஜேந்திர ஓலா, ராஜேந்திர குடா, முராரிலால் மீனா ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பார்கள். ஹேமாராம் சவுத்ரி, ரமேஷ் மீனா, முராரிலால் மீனா, பிரிஜேந்திர ஓலா ஆகியோர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ஆவர்.

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களில் ஒருவரான ராஜேந்திர குடாவும் அமைச்சராக பதவியேற்பார். கடந்தாண்டு முதல்வர் அசோக் கெலாட் தலைமைக்கு எதிராக கோஷ்டி அரசியலில் ஈடுபட்ட அப்போதைய துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு ஆதரவளித்த அமைச்சர்களில் விஷ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோர் அடங்குவர். அவர்கள் அப்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. வரும் 2023ம் ஆண்டு ராஜஸ்தானில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கெலாட்டுக்கும், சச்சினுக்கு இடையிலான மோதலை கருத்தில் கொண்டு தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. ராஜஸ்தான் மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அஜய் மக்கான், ஜெய்ப்பூரில் முகாமிட்டு கெலாட் - சச்சின் ஆதரவு எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து மோதலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்’ என்றனர்.

Related Stories: