சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முருகேசன் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் தலைமையில் மூவர் அடங்கிய தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை ஆய்வு செய்து முதற்கட்டமாக 10 பேரை தேர்வு செய்தது.

தேர்வு செய்யப்பட்டவர்களிடம் கடந்த மாதம் நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேளாண் கல்லூரி தலைவர் கதிரேசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ரவி, மாணிக்கம், ஜெயகாந்தன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு, இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேளாண் கல்லூரி தலைவர் ஆர்.எம்.கதிரேசன் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமன ஆணையை துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசனிடம் நேற்று வழங்கினார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

Related Stories: