திண்டுக்கல் கோயில்களில் கார்த்திகை தீபத்திருவிழா

பழநி : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, கார்த்திகை தீபமும், சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா. இவ்விழா கடந்த 13ம் தேதி மலைக்கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.  முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. 4.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி யாகசாலை தீபாராதனை முடித்து உள்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து சின்னக்குமாரர் தீபம் ஏற்றும் மண்டபம் வந்தடையும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5.30 மணிக்கு உள்பிரகாரத்தின் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு தீபஸ்தம்பத்தில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், மேற்கு ரத விதி லட்சுமிநாராயண பெருமாள் கோயில் மற்றும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில்களில் மகா தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.  கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கோயில் யூடியூப் மற்றும் வலைதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சின்னாளபட்டியில் கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசிவசுப்பிரமணியர் சுவாமி கோயில். இக்கோயிலில் வடபுறம் நான்கு முகங்களுடன் கூடிய முருகர் சன்னதி அமைந்திருப்பது தனி சிறப்பு. ஒவ்வொரு வருடமும் கார்த்திகையை முன்னிட்டு 10,008 விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். இவ்வருடம் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது. மூலவருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது.

உற்சவரான வள்ளிதேவசேனா சமேத முருக பெருமானுக்கு வைர அங்கி அணிவித்து பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் முன் மண்டபத்தில் வைத்திருந்தனர். அதிகாலை முதல் பக்தர்களின் கூட்டம் கோயிலில் அலைமோதியது. சுவாமிக்கான அலங்காரத்தை கோயில் தலைமை குருக்கள் மயிலாடுதுறை விசுவநாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாலை 6 மணியளவில் கோயில் முழுவதும் 10,008 விளக்குகள் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் விசாகன் தலைமையிலான விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

நத்தம் மாரியம்மன் கோயிலில் பெண்கள் கோயிலின் உள்,வெளி பிரகாரங்களில் தீபங்கள் ஏற்றினர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், நத்தம் காளியம்மன், பகவதி அம்மன், விநாயகர் கோயில்களில் பக்தர்கள் கலந்து கொண்டு கார்த்திகை விளக்கு தீபங்களை ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இங்கும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி தரிசனம் செய்தனர்.

Related Stories: