குண்டாற்று தரைப்பாலத்தில் அதிகரிக்கும் வெள்ளப்பெருக்கு-பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருச்சுழி : திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குச்சம்பட்டிபுதூர் குண்டாற்று தரைப்பாலத்தின் மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.திருச்சுழி அருகே குச்சம்பட்டி புதூர் பகுதியில் குண்டாற்று தரைப்பாலத்தின் மேல் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பாலத்தைக் கடந்து சென்று வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திருச்சுழி, குச்சம்பட்டி புதூர், உடையனேந்தல், கிருஷ்ணாபுரம், பி.புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்றுப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் குச்சம்பட்டி புதூர் மற்றும் உடையனாம்பட்டி தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆனால், வெள்ளத்தின் ஆபத்தை உணராத பொதுமக்கள் தரைப்பாலத்தின் மேல் நடந்தும், கார், இருசக்கர வாகனங்களிலும் பாலத்தை கடந்து செல்கின்றனர்.

மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் குண்டாற்றில் வெள்ளம் செல்வதால் அதை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதனிடையே, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories: