கார் ஏற்றி 4 விவசாயிகள் படுகொலை லக்கிம்பூர் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு நீதிபதி தலைமையில் குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை ஓய்வு நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையில் விசாரிக்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகளுக்கும், அதன் பிறகு நடந்த வன்முறையில் 4 பாஜ.வினர் உட்பட 5 பேர் என, மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். இது பற்றி உத்தரப் பிரதேச அரசு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உ.பி அரசின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், நாங்கள் எதிர்ப்பார்த்த திசையில் வழக்கு செல்லவில்லை என்பதால், இதுதொடர்பான வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் குழு அமைத்து நடத்தலாமா? என கேள்வியெழுப்பி இருந்தது.

மேலும், இது குறித்து உ.பி அரசு தனது நிலைப்பாட்டினை தெரிவிக்க அவகாசமும் வழங்கியிருந்தது. இதையடுத்து கடந்த 15ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வேறு மாநில உயர் நீதிமன்றம் ஓய்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்து வழக்கை விசாரிக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என உபி அரசு தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 17ம் இந்த குழு குறித்த விவரங்களை அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவிட்டது. அதில், ‘லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை பஞ்சாப் - அரியானா மாநிலத்தின் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்படும். அதே போன்று ஷிரோத்கர், தீபிந்தர் சிங் மற்றும் பத்மஜா சவுகான் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் விசாரணை குழுவில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஓய்வு நீதிபதியிடம் இருந்து அறிக்கை பெறப்பட்ட பிறகு அடுத்தக் கட்ட விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளும்,’ என உத்தரவிடப்பட்டது.

Related Stories: