தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பு நதி நீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் தீர்வு: அமைச்சர் பொன்முடி பேட்டி

திருமலை: ‘அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்,’ என் தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று மாலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல குழுவின் 29வது கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் உயர்க்கல்வி மற்றும் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரளா மாநில அமைச்சர், புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன், முதல்வர் ரங்கசாமி, அந்தமான் நிக்கோபார் துணை நிலை ஆளுநர் ஜோஷி, லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் சமர்பித்த அறிக்கையில், ‘கிருஷ்ணா ஆற்றிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏற்படுத்திய கால்வாய் பணிகள், நீர் திறந்த விடுவதற்கான நிர்வாக செலவுகளுக்கான ரூ.338.48 கோடியை கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும். குப்பம் அ ருகில் பாலாற்றின் மீது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசிடம் ஒன்றிய அரசு அனுமதி பெற்று தர வேண்டும்,’ என கோரினார். கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘‘காவிரி- வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் ஆணையத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்,’’ என்றார்.

அமித்ஷா பேசுகையில், ‘தென் மாநிலங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளையும் மோடி அரசு மதிக்கிறது. கொரோனா தடுப்பூசி 111 கோடி டோஸ் சாதனையை ஒன்றிய அரசு எட்டியுள்ளது,’’ என்றார். கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், ‘‘ ‘தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாலாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கேட்டார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் பாலாற்றை நம்பி இருக்கிறோம். எனவே, குப்பத்தில் அணை கட்ட வேண்டாம் என கூறி இருக்கிறோம். எனவே, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மற்ற மாநிலங்களுடன் பேசி, நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்,’’ என்றார்.

Related Stories: