இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஈக்வடார் சிறையில் 70 கைதிகள் கொலை

ஈக்வடார்: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் துறைமுக நகரமமான கயாகில் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அதிகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக கயாகில் உள்ளது. இந்நிலையில், கயாகில் சிறைக்குள் நேற்று முன்தினம் கலவரம் வெடித்தது. போதைப் பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் 2 குழுக்கள் சிறைக்குள் கடுமையாக மோதிக் கொண்டனர். இரு குழுக்களும், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்கிக் கொண்டதில் 70 கைதிகள் உயிரிழந்தனர். 25க்கும் அதிகமானோருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் ஈக்வடார் நாட்டின் சிறைக்குள் கலவரத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

நடப்பாண்டில் மட்டும் 300-க்கும் அதிகமானோர் சிறை கலவரத்தில் பலியாகி உள்ளனர். போதைப் பொருள் விஷயத்தில்தான் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்துள்ள கயாகில் சிறையில் 5,300 பேர் மட்டுமே அடைக்க முடியும். ஆனால் 8,500 பேர் கைதிகளாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாசோ கூறியுள்ளார்.

Related Stories: