சென்னையைத் தொடர்ந்து கடலூரில் டிராக்டரில் ஊர்வலமாக சென்று பாஜ தலைவர் அண்ணாமலை அலப்பறை: பொதுமக்கள் எரிச்சல்

புவனகிரி: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிறுவர்கள் கூட நடந்து செல்லும் அளவிற்கு கணுக்கால் அளவே தண்ணீர் தேங்கி இருந்த பகுதியில் படகில் சென்று பார்வையிட்டார். இது சமூக வலைத்தளங்களில் பரவிப் பெரிதாகி, நகைப்புக்கு உள்ளானது. நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்திருந்தனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பூவாலை கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பாஜக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் தொண்டர்களுடன் பூவாலை கிராமத்திற்கு காரில் சென்றார். அதற்கு முன்னதாகவே அவர் பாதிக்கப்பட்ட வயலை பார்வையிட பயணிப்பதற்காக பாஜகவினர் டிராக்டர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் ஏறி டிரைவர் இருக்கைக்கு அருகே அண்ணாமலை உட்கார்ந்து கொண்டார். டிராக்டரில் ஏராளமானோர் ஏறிக்கொண்டனர். அதற்குப் பின்னால் மேலும் 3 டிராக்டர்களில் பாஜகவினர் ஏறிக்கொண்டனர். பின்னர் அந்த வழியே பயிர்கள் மூழ்கி இருந்த விளைநிலங்களை பார்த்தபடி சென்றார். வெள்ள பாதிப்புகளை இறங்கி பார்வையிடாமல், ஏதோ விவசாய பேரணிக்கு டிராக்டரில் செல்வதைப் போல அண்ணாமலையின் செயல் இருந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எரிச்சல் அடைந்தனர். அண்ணாமலையின் டிராக்டருக்கு பின்னால் வந்த பாஜவினர், இடையிடையே பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: