கல்லூரி, பல்கலை பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயமில்லை: கேரள உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி மற்றும் பல்கலை கழக பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் இல்லை என்று உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு பணிபுரியும் பேராசிரியைகள் அனைவரும் கண்டிப்பாக சேலை அணிய வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்லூரி பேராசிரியை ஒருவர் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்துக்கு புகார் கொடுத்தார்.

அதில், கல்லூரிக்கு தினமும் சேலை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். வேலை வேண்டும் என்றால் சேலை அணிய வேண்டும் என்றும் நிர்வாகம் கட்டாயப் படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கேரளாவில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் இல்லை என்று உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், கல்லூரிகளில் சேலை அணிவதை கட்டாயப்படுத்த கூடாது. நாகரீகமான எந்த உடையையும் அணியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பிந்து கூறியதாவது; நானும் ஒரு கல்லூரி ஆசிரியையாக புணிபுரிந்து உள்ளேன். திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் பணிபுரிந்த போது, சுடிதார் அணிந்து தான் கல்லூரிக்கு சென்று வந்தேன். உடை அணிவது என்பது ஒருவரது தனிப்பட்ட விசயமாகும்.

அதில் தேவையில்லாமல் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் சேலை அணிய கட்டாயப்படுத்த கூடாது என்று 2014ம் ஆண்டு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இப்போதும் சில கல்வி நிறுவனங்கள் சேலை அணிவதை கட்டாயப் படுத்துவதால் தான் மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: